Last Updated:
கடந்த காலங்களில் நாம் எதிர்கொண்ட தோல்விகளையும் மறந்து விடக் கூடாது. அவை நாம் கவனத்துடன் எதிர்காலத்தில் செயல்பட உதவும்.
நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது இன்றைக்கும் வருத்தம் அளிப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
நியூசிலாந்து தொடரை இழந்ததன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கடந்த ஆண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
அன்றைய சூழலில் இலங்கையிடம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை இழந்து இந்தியாவுக்கு வந்திருந்தது. இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வென்றது. இதனால் இந்திய அணியின் வெற்றி சதவீதம் அதிரடியாக குறைந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கூறியதாவது-
எதிர்காலத்தில் நாம் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரம் கடந்த காலங்களில் நாம் எதிர்கொண்ட தோல்விகளையும் மறந்து விடக் கூடாது. அவை நாம் கவனத்துடன் எதிர்காலத்தில் செயல்பட உதவும்.
கடந்த ஆண்டு நியூசிலாந்து இந்தியாவுக்கு வந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த அணியை இந்தியா மிக எளிதாக வென்றுவிடும் என்றுதான் அனைவரும் கருதினார்கள். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக இந்திய அணி சொந்த மண்ணில் 3 போட்டிகளில் தோல்வியடைந்தது.
இந்த தோல்வியை மறந்து விடக்கூடாது. அதனை இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் வேதனை அளிப்பதாக உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.
October 11, 2025 10:17 PM IST