Last Updated:
CM Trophy 2025| இந்தச் சாதனையைப் பாராட்டி அரசு சார்பில் ஒவ்வொரு மாணவிகளின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.75 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. இதில், தஞ்சாவூர் பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள், மாவட்ட அளவில் வெற்றி பெற்று தகுதி பெற்றிருந்தனர்.
இவர்கள் மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். மேலும் தங்கப் பதக்கத்துடன் தஞ்சை திரும்பிய ஏழு மாணவிகளுக்கும் தஞ்சை மேம்பாலம் அருகே ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசுகள் வெடித்து, ஒவ்வொரு மாணவிகளுக்கும் தனித்தனியாகப் பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்தினர். மேள, தாளம் முழங்க மாணவிகள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி வளாகத்திற்குள், ஓர் ஆசிரியை ஆரத்தி எடுத்து, மாணவிகளின் நெற்றியில் திலகமிட்டு அன்புடன் வரவேற்றார்.
தொடர்ந்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். வெற்றி பெற்ற ஏழு மாணவிகளும் தாங்கள் வென்ற தங்கப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் ஆசிரியர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். மேலும், இந்தச் சாதனையைப் பாராட்டி அரசு சார்பில் ஒவ்வொரு மாணவிகளின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.75 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.
October 13, 2025 11:09 AM IST