வாஷிங்டன்: கடந்த எட்டு மாதங்களில் உலக நாடுகளுக்கு இடையிலான எட்டு போர்களை நிறுத்தி உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நாட்டின் அதிபராக டொனல்டு ட்ரம்ப் பதவியேற்றார். அப்போது முதல் அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதில் அமெரிக்காவின் வளர்ச்சி அமைந்துள்ளதாக அவர் கூறி வருகிறார். அந்த வகையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது, வெளிநாடுகள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
முக்கியமாக உலக நாடுகளுக்கு இடையிலான போர்களை நிறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்து வருகிறார். கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை தனது தலையீடு காரணமாக நிறுத்தியதாக அவர் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“கடந்த எட்டு மாதங்களில் எட்டு போர்களை நான் நிறுத்தியுள்ளேன். இன்னும் ஒரு போரை நான் நிறுத்த வேண்டி உள்ளது. அது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலானது. அந்த முயற்சியில் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம்.
வணிகம் மற்றும் வரி விவகாரத்தை சுட்டிக்காட்டி இந்த எட்டு போர்களில் ஐந்து போர்களை நிறுத்தி உள்ளோம். இந்த போர்களை நிறுத்தியதற்காக நான் பெருமை கொள்கிறேன். இது போல எந்தவொரு அமெரிக்க அதிபரும் செயல்பட்டது அல்ல என நான் கருதுகிறேன்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.