பெர்த்: இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மார்னஷ் லபுஷேன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் வரும் 19ம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து கேமரூன் கிரீன் விலகி உள்ளார்.
அடுத்த மாதம் ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. கேமரூன் கிரீன் விலகியதை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் சீனியர் பேட்ஸ்மேனான மார்னஷ் லபுஷேன் சேர்க்கப்பட்டுள்ளார்.
மார்னஷ் லபுஷேன், உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஷெப்ஃபில்டு ஷீல்டு போட்டியில் குயின்ஸ்லாந்து அணிக்காக கடந்த 16ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் சதம் அடித்திருந்தார். இந்த சீசனில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது 4வது சதம் இதுவாகும். நடப்பு பார்மை கருத்தில் கொண்டு அவர், ஆஸ்திரேலிய அணிக்குள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மாற்றங்களை மேற்கொள்வது இது 3வது முறையாகும்.
இந்தத் தொடரில் முதல் போட்டியில் பங்கேற்காத ஆடம் ஸம்பா, அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஷ் ஆகியோர் கடைசி இரு ஆட்டங்களிலும் விளையாடுவார்கள் எனவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி விவரம்: மிட்செல் மார்ஷ்(கேப்டன்), டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மேத்யூ குனேமன், மிட்செல் ஸ்டார்க், சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நேதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட்.