ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா இடம் பிடித்தது குறித்து விமர்சித்த முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்திற்கு கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட ஹர்ஷித் ராணாவுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், ஹர்ஷித் ராணா கவுதம் கம்பீரின் விருப்பமானவர் என்பதால், அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த கவுதம் கம்பீர், யூடியூப் சேனலை நடத்துவதற்காக, இளம் வீரரை விமர்சிப்பது நியாயமற்றது என்றும் நேர்மையாக கூற வேண்டும் எனில் இது ஒரு வெட்கக்கேடான விஷயம் என்று கூறினார். ஹர்ஷித் ராணாவின் தந்தை ஒன்று முன்னாள் தேர்வுக்குழு தலைவரோ அல்லது கிரிக்கெட் வீரரோ அல்ல. அவர் தனது திறமையால் இங்கு வந்துள்ளார் என்றும் கவுதம் கம்பீர் கூறினார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 19ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 19, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும், டி20 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 29, 31, நவம்பர் 2, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. அண்மையில் இந்தத் தொடருக்கான இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு அறிவித்தது. அதில் ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.
கேப்டன் பதவி குறித்து பேசிய அஜித் அகர்கர், “மூன்று ஃபார்மெட் அணிகளுக்கும் மூன்று வெவ்வேறு கேப்டன்களைக் கொண்டிருப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. மூன்று வெவ்வேறு கேப்டன்களுடன் திட்டமிடுவதும் பயிற்சியாளருக்கு கடினம். 2027 ஆம் ஆண்டு அடுத்த உலகக் கோப்பையுடன், புதிய கேப்டனைப் பெற இதுவே சரியான நேரம் என்று நாங்கள் உணர்ந்தோம்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிக ஒருநாள் போட்டிகள் இல்லை. மேலும் புதிய கேப்டனுக்கு தனது அணியை உருவாக்க நேரமும் வாய்ப்புகளும் தேவை என்பதால் நீண்டகால திட்டமிடலின் ஒருபகுதியாக ரோகித் சர்மாவுக்கு பதில் சுப்மன் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு குறித்து ரோகித்துக்கு தெரிவிக்கப்பட்டது.” என்றார்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிரஷ்ணா, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
October 14, 2025 7:29 PM IST