ஹோகூர் பஹ்ரு: சுல்தான் ஆப் ஜோகூர் ஜூனியர் ஆக்கி கோப்பை தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
6 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் இதில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நேற்று மலேசியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் 22-வது நிமிடத்தில் குர்ஜோத் சிங்கும், 48-வது நிமிடத்தில் சவுரப் ஆனந்த் குஷ்வாஹா 48-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியை பதிவு செய்திருந்தது. இதுவரை நடைபெற்றுள்ள 12 தொடர்களில் இந்திய அணி 8-வது முறையாக இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளது. இன்று (18-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.