ஈப்போ:
தஞ்சோங் மாலிம் அருகே உள்ள குனுங் லியாங் பாராட் மலை உச்சியில் வியாழக்கிழமை இறந்து கிடந்த முஸ்தக்கீம் மன்சோர் என்ற மலையேற்ற வீரரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவ எட்டு பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அழைக்கப்பட்டவர்களில் மலையேற்ற நடவடிக்கை ஏற்பாட்டாளர்கள் மற்றும் பயணத்தில் பங்கேற்ற பாதிக்கப்பட்டவரின் சக மலையேற்ற வீரர்கள் அடங்குவர் என்று, முஅல்லிம் துணை மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை கண்காணிப்பாளர் சுஹைமி முகமட் கூறினார்.
“இன்னும் மூன்று மலையேறுபவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை, மேலும் விசாரணையை முடிக்க விரைவில் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
“வேலை மற்றும் விடுமுறை காரணமாக மலை அடிவாரத்திற்கு வந்த மற்ற மூன்று மலையேறுபவர்களும் மலையேறாது உடனடியாக வீடு திரும்பினர் என்பது அறியப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
“இதுவரை, இந்த வழக்கை திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தி, விசாரணை மேற்கொண்டு வருகிறது ” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஸ்லிம் ரிவர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிவுகள், இறந்த 34 வயதான முஸ்தக்கீமின் மரணத்திற்கான காரணம் தாழ்வெப்பநிலை அல்லது கடுமையான குளிர் காரணமாக இருந்க்கலாம் என்று கண்டறிந்தன.
பாதிக்கப்பட்டவர் அக்டோபர் 16 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் லியாங் மலையின் உச்சியில் இறந்து கிடந்தார், பின்னர் வெள்ளிக்கிழமை தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் சிறப்பு விமானப்படைக்கு சொந்தமான AW189 ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி அவரது உடல் வெளியே எடுக்கப்பட்டது.