Last Updated:
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் பவுலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை தடுமாற வைத்தனர்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆடுகளம் திரும்பிய ரோஹித் சர்மா 8 ரன்களிலும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சுப்மன் கில் 10 ரன்கள் சேர்த்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களும், அக்சர் படேல் 31 ரன்களும் எடுத்தனர்.
ஓரளவு அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 31 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னிலும் ஹர்ஷித் ரானா 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 26 ஓவர்களை கொண்டதாக மாற்றப்பட்டது.
26 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 2 பவுண்டரியுடன் 5 பந்துகளில் 8 ரன்கள் எடுததிருந்தபோது அர்ஷ்தீப் வேகத்தில் ஹர்ஷித் ரானாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மேத்யூ ஷார்ட் 17 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தார். பின்னர் இணைந்த மிட்செல் மார்ஷ் – ஜோஷ் பிலிப் இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது.
இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜோஷ் 29 பந்துகளில் அதிரடியாக 37 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் இணைந்த மிட்செல் மார்ஷ் – மேட் ரின்ஷா இணை வெற்றியை உறுதி செய்தது. 21.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலிய அணி 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மார்ஷ் 46 ரன்களுடனும், ரின்ஷா 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
October 19, 2025 5:03 PM IST