புதுடெல்லி: டெல்லியின் பிஷாம்பர் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்ரா அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020-ம் ஆண்டு திறந்து வைத்தார். இதில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் (எம்.பி.) தங்கி உள்ளனர்.
இந்தக் குடியிருப்பு வளாகத்தில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதேநேரம், அந்தக் குடியிருப்பு வளாகத்தில் இருந்த தீயணைப்பு சாதனங்கள் வேலை செய்யவில்லை என குடியிருப்புவாசிகள் புகார் செய்தனர்.