தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு (Jagath Wickramaratne) எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வரைவு தயாரிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா (Ajith Perera) அறிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வரைவு எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சித் தலைவர்களின் ஒப்புதல் கிடைத்த பின்னர், அதே வாரத்திலேயே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்து பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதன் பின்னர் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அருண ஜயசேகரவுக்கு எதிரான பிரேரணை
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எந்தக் காரணமும் இன்றி சபாநாயகர் நிராகரித்தார் என்றும், இதன் மூலம் அவர் நாடாளுமன்றத்தை வழிதவறச் செய்தார் என்றும் அஜித் பி.பெரேரா சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில், சபாநாயகர் மீதான நம்பிக்கை இழந்ததாலேயே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சபாநாயகரின் பக்கச்சார்பான செயற்பாடுகள் தொடர்பாகவும் பல விடயங்கள் இருப்பதாகவும், இதன் காரணமாகவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் மீது நம்பிக்கையிழந்துள்ளனர் என்றும் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
எனவே, எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்திற்கு மிக விரைவாகக் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும்“ அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |