சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,600 குறைந்து, ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை பெரும்பாலான நாட்களில் உயர்ந்தே வந்தது. அதாவது, கடந்த செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை அக்.14-ம் தேதி ரூ.95,200 ஆக உயர்ந்தது.
எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்தது, தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தன. இதன் விளைவாக, தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து, வரலாறு காணாத உச்சங்களை பதிவு செய்தது.
22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12,200-க்கும், ஒரு பவுன் ரூ.97,600-க்கும் விற்பனையானது. விரைவில் பவுன் விலை ரூ.1 லட்சத்தை எட்டும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை பவுனுக்கு ரூ.2,000 குறைந்து, மாலையில் ரூ.400 உயர்ந்தது. இதனால் ஒட்டுமொத்தமாக நேற்று பவுனுக்கு ரூ.1,600 குறைந்தது. இதனால், தங்கம் ஒரு கிராம் ரூ.12,000-க்கும், ஒரு பவுன் ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் சுத்த தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.13,091, ஒரு பவுன் ரூ.1,04,728 ஆக இருந்தது.
வெள்ளி விலையும் குறைந்தது: வெள்ளி விலையும் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.190 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.13,000 குறைந்து, ரூ.1,90,000 ஆகவும் இருந்தது.