சிட்னி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி உடனான பிணைப்பு எப்போதும் போல வலுவாகவே உள்ளது என இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
அவர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி உடன் 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். இது பேசுபொருளானது. இந்த சூழலில் ஒருநாள் அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளதாவது:
“வெளியில் பலரும் பல்வேறு விதமாக பேசுகிறார்கள். ஆனால், ரோஹித் உடனான எனது உறவு எப்போதும் போலவே உள்ளது. நான் அவரிடம் எப்போது என்ன கேட்டாலும் அது சார்ந்து அது தொடர்பான உள்ளீடுகளை எனக்கு கொடுப்பார்.
‘நீங்கள் கேப்டன் செய்தால் என்ன செய்வீர்கள்?’ என்றே விராட் மற்றும் ரோஹித் வசம் நான் கேட்பேன். அவர்களும் அதற்கு தயங்காமல் பதில் தருவார்கள். அதோடு மட்டுமல்லாது அணியை முன்னேற்றும் வகையிலான உரையாடலிலும் அவர்களுடன் ஈடுபடுவது உண்டு. அவர்கள் உடனான பிணைப்பு எப்போதும் போல வலுவாக உள்ளது
இந்த பொறுப்பு எனக்கு மிகப்பெரியது. ஏனெனில், இந்த பணியை இதற்கு முன்பு கவனித்தவர்கள் தோனி, விராட் மற்றும் ரோஹித். அவர்களது அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம். அவர்களது அணியில் விளையாடி உள்ளேன். அந்த அனுபவம் எனக்கு இதில் கைகொடுக்கும். அவர்கள் இருவரும் சுமார் 20 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். கேப்டன் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பு. அழுத்தம் மிகுந்த தருணத்தில் சிறந்த ஆட்டத்தை நான் வெளிப்படுத்துவது உண்டு. அதே நேரத்தில் பேட் செய்யும் போது எனது கவனம் பேட்டிங்கில் மட்டும்தான் இருக்கும். அப்போது நான் கேப்டனாக சிந்திப்பது கிடையாது” என கூறியுள்ளார்.