Last Updated:
ஹரியானாவில் பெண் யூடியூபர் மரணத்தில் திடீர் திருப்பமாகக் கழுத்தை நெரித்துத் துடிதுடிக்க அவர் கொலை செய்யப்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது.
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்பா. பெண் யூடியூபரான இவர், சோசியல் மீடியாவில் வீடியோ பதிவிட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்தார். ஏற்கனவே திருமணமாகி அவரது கணவருடன் வசித்து வந்த புஷ்பாவிற்கு, ஹரியானாவின் ஹர்சனா கிராமத்தில் வசிக்கும் சந்தீப் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
காதல் கண்ணை மறைக்க, கணவரை விட்டு பிரிய முடிவெடுத்தவர் வீட்டை விட்டு வெளியேறி காதலன் சந்தீப்புடன் கைகோர்த்துள்ளார். சந்தீப்பும் யூடியூபர் என்பதால் இருவரும் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு சோசியல் மீடியாவில் பிசியாக இருந்தனர். இதற்கிடையே தான், கடந்த அக்டோபர் 5ஆம் தேதி காதலனின் வீட்டில் புஷ்பா தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். ஊர்க்காரர்கள் மூலம் தகவலறிந்து வந்த போலீசார், புஷ்பாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
கணவரை விட்டு பிரிந்த துக்கத்தால் புஷ்பா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நீடிக்க தனது காதலி இப்படி செய்து கொண்டாரே! என சந்தீப்பும் கண்ணீர் கடலில் மூழ்கியிருந்தார். இதற்கிடையேதான், சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு, புஷ்பாவின் உடற்கூராய்வு முடிவு போலீசாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. காரணம் புஷ்பாவின் மரணம் தற்கொலையல்ல! அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறி மருத்துவர்கள் ஷாக் கொடுத்தனர்.
அதுவரை தற்கொலை வழக்காக இருந்த சம்பவம், கொலை வழக்காகத் திசை திரும்ப, புஷ்பாவை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடங்கினர். அதில் பலரையும் அழைத்து விசாரிக்க, புஷ்பாவின் காதலன் சந்தீப் மீது ஆழமான சந்தேகம் உண்டானது. காரணம் போலீசார் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததுடன் “தனது காதலியை யார்? தான் கொலை செய்தார்களோ?” என கண்ணீர் விட்டு உருண்டு பெரண்டு அழுதுள்ளார்.
பார்ப்பதற்கு அது ஓவர் ஆக்டிங் போல இருந்ததால் உடனே சந்தீப்பை தூக்கி ஸ்பெஷல் விசாரணைக்குள் கொண்டு வந்தனர். அதில் முடிந்தவரை நழுவ முயன்ற சந்தீப், இறுதியில் புஷ்பாவை “நான் தான் சார் கொலை செய்தேன்” என ஒப்புக்கொண்டார். கணவரை விட்டு பிரிந்து வந்த புஷ்பா திருமணம் செய்து கொள்ள சொல்லி காதலன் சந்தீப்பை அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சந்தீப், “தற்போது திருமணம் செய்து கொள்ள தனக்கு விருப்பம் இல்லை” என புஷ்பாவிடம் கூறியுள்ளார். இதனால் காதலர்களுக்குள் விரிசல் விழ, அடிக்கடி அது தொடர்பாக சண்டை போட்டு வந்துள்ளனர். சம்பவத்தன்று வழக்கம் போல இருவருக்கும் சண்டை உண்டாக அதில் ஆத்திரம் அடைந்த சந்தீப் இவளா நிம்மதியே போச்சு என நினைத்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். புஷ்பாவின் கழுத்தை நெரித்து அவர் துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.
பின்னர் “வெளியே தெரிந்தால் போலீசில் சிக்கிக் கொள்வோம்” என்ற அச்சத்தில், புஷ்பாவின் கழுத்தில் கயிற்றை கட்டி தொங்கவிட்டு தற்கொலை போல சித்தரித்துள்ளார். 11 நாட்களாகியும் போலீசார் தன்னை நெருங்காமல் இருந்ததால் நிம்மதியாக இருந்தவரை இறுதியில் புஷ்பாவின் உடற்கூராய்வு முடிவு சிக்க வைத்துள்ளது.
இதனை அடுத்து சந்தீப்பை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கணவரை விட்டு பிரிந்து கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் யூடியூபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
October 18, 2025 8:27 PM IST