Last Updated:
எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறுவது வழக்கம். பண்டிகை நாட்களில் ரூ.6 கோடி முதல் ரூ.9 கோடி வரையிலும் ஆடுகள் விற்பனை நடைபெறும்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் பகுதியில் தென் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.
இங்கு திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோவை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவதும், வியாபாரிகள் அவற்றை வாங்குவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இச்சந்தையில் ஆண்டுதோறும் ரம்ஜான், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும், முகூர்த்த காலங்களிலும், கோயில் திருவிழாக்கள் நடைபெறும் காலங்களிலும் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெறும். இங்கு சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறுவது வழக்கம். பண்டிகை நாட்களில் ரூ.6 கோடி முதல் ரூ.9 கோடி வரையிலும் ஆடுகள் விற்பனை நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி, எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் அதிகளவு வியாபாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக எதிர்பார்த்த அளவில் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. அதேபோல், வியாபாரிகளும் குறைந்த அளவில் மட்டுமே சந்தைக்கு வந்தனர்.
இருப்பினும், சந்தையில் கிடைத்த ஆடுகளின் விலை சற்று உயர்ந்தே காணப்பட்டது. ஆடுகளின் வயது மற்றும் தரத்தைப் பொறுத்து விலை ரூ.3,000 முதல் ரூ.30,000 வரை விற்பனை ஆனது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், “எட்டயபுரம் ஆட்டுச் சந்தைக்கு வரும் ஆடுகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வருவதால், அவற்றுக்கு தனி மவுசு உண்டு.
இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிகளவு வர்த்தகம் நடைபெறும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் தொடர்ச்சியான மழை காரணமாக ஆடுகள் வரத்து குறைந்தது, அதேசமயம் விலையும் உயர்ந்தது. கடந்தாண்டு ரூ.8 கோடி வரை விற்பனை நடந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் ரூ.6 கோடி மதிப்பிலேயே விற்பனை நடைபெற்றது. மழை காரணமாக வியாபாரம் மந்தமாக இருந்ததாகவும், இதனால் வருமானத்தில் குறைவு ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
Thoothukkudi,Tamil Nadu
October 18, 2025 5:23 PM IST