[ad_1]
Last Updated:
வங்கதேசத்தின் வர்த்தக அமைச்சகம் சமீபத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்து, அதில் ஹில்சா மீனுக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை 1 கிலோவுக்கு 12.50 அமெரிக்க டாலர் (ரூ.1,520.73) என நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் துர்கா பூஜைக்கு முன்னதாக, உள்நாட்டில் இலிஷ் (ilish) என்று அழைக்கப்படும் ஹில்சா மீனை நம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 1,200 டன் (1.2 மில்லியன் கிலோ கிராம்) ஹில்சா மீனை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும், இந்த அளவு கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டதைவிட கிட்டத்தட்ட பாதிதான் என்று வங்கதேச நாளிதழான Prothom Alo-ன் அறிக்கை தெரிவிக்கிறது. வங்கதேசத்தின் வர்த்தக அமைச்சகம் சமீபத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்து, அதில் ஹில்சா மீனுக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை 1 கிலோவுக்கு 12.50 அமெரிக்க டாலர் (ரூ.1,520.73) என நிர்ணயித்துள்ளது. இந்த மீனை ஏற்றுமதி செய்ய விரும்பும் ஏற்றுமதியாளர்கள் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் வர்த்தக உரிமங்கள், வரி ஆவணங்கள் மற்றும் மீன்வளத் துறையின் அனுமதியுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக புரோதோம் அலோ செய்தி வெளியிட்டுள்ளது.
“அதேபோல இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு விண்ணப்பித்தவர்கள் புதிய விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் அனுமதிகளை வேறு யாருக்காவது மாற்றவோ, அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டை மீறவோ அல்லது சரக்குகளை துணை ஒப்பந்தம் செய்யவோ கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளுடன், எந்த நேரத்திலும் ஏற்றுமதியை நிறுத்தும் உரிமையையும் அதிகாரிகள் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டில், வங்கதேச அரசாங்கம் ஆரம்பத்தில் 3,000 டன்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க பரிசீலித்த பிறகு 2,420 டன்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்தது. வங்கதேசத்தின் சிறப்பு அடையாளமாக ஹில்சா மீன் கருதப்படுகிறது. மேலும் இந்தியாவில், குறிப்பாக நம் நாட்டின் மேற்குவங்க மக்கள் மிகுந்த விருப்பத்துடன் இதனை சாப்பிட்டு வருகிறார்கள்.
சிறந்த சுவைக்கு பெயர்பெற்ற இந்த மீன், பெட்ராபோல்-பெனாபோல் எல்லையைக் கடந்து ஹவுரா சந்தையை அடைவதும், அங்கு கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு சில்லறை சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனிடையே இந்தியாவுக்கான வங்கதேச ஹை கமிஷனர் ரியாஸ் ஹமீதுல்லா இந்தியாவிற்கு ஹில்சா மீன் ஏற்றுமதி குறித்து எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அறிவித்து, X-ல் பதிவிட்டதாவது “Ilish வருகிறது.
நீடித்த நட்பின் அடையாளமாக, பண்டிகை காலங்களுக்கு முன்னதாக, வங்கதேச அரசு இந்தியாவிற்கு மிகச்சிறந்த மீன்களை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது” என்று பதிவிட்டு உள்ளார். கடந்த ஆகஸ்ட் 2024-ல் அந்நாட்டு அதிபர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவுகள் விரிசல் அடைந்த நிலையில், தற்போது இந்த ஏற்றுமதி அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
September 11, 2025 6:00 PM IST