[ad_1]
பஞ்சாப் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரிலையன்ஸ் உதவிக்கரம் வகையில் 10 அம்ச நிவாரணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் பதான்கோட், குர்தாஸ்பூர், அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. இதற்கிடையே, பஞ்சாப்பில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 10 அம்ச நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஊட்டச்சத்து, தங்குமிடம், சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்பு போன்ற அம்சங்களை வழங்குகிறது. அமிர்தசரஸ் மற்றும் சுல்தான்பூர் லோதி போன்ற வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 10,000 குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் ஆனந்த் அம்பானி விடுத்துள்ள செய்தி குறிப்பில், “இந்த கடினமான நேரத்தில் பஞ்சாப் மக்கள் துன்பத்தை நேரிட்டுள்ளனர். மக்கள் தங்களின் வீடுகள், வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இந்த தருணத்தில் முழு ரிலையன்ஸ் குடும்பமும் பஞ்சாப் மாநில மக்களின் தோளோடு தோள் நின்று அவர்களுக்கு உணவு போன்ற தேவைகள் மற்றும் விலங்குகளுக்கான பராமரிப்பை வழங்கும் எனத் தெரிவித்து கொள்கிறேன். அதற்காக 10 அம்ச திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன. இந்த கடினமான நேரத்தில் பஞ்சாப் உடன் நிற்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று கூறியிருக்கிறார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை, ரிலையன்ஸ் ரீடெய்ல், ஜியோ மற்றும் வந்தாரா ஆகியவை இணைந்து பஞ்சாப் மக்களுக்கான நிவாரண திட்டத்தை செயல்படுத்துகின்றன. இதனொரு பகுதியாக 10,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்களை கொண்டுள்ள 1,000 வீடுகளுக்கு ரூ. 5,000 மதிப்புள்ள வவுச்சர் அடிப்படையிலான உதவி வழங்கப்படுகிறது.
வெள்ளத்தால் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு தார்பாய்கள், படுக்கை, கொசு வலைகள் மற்றும் கயிறுகள் கொண்ட அவசரகால தங்குமிட உபகரணங்கள் வழங்கப்படும். வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் நீரால் பரவும் நோய்களின் அபாயத்தை குறைக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்படுகிறது.
வெள்ளத்திற்குப் பிறகு நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதார முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதேபோல், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுகாதார பெட்டகம் வழங்கப்படுகிறது. இதில் 21 வகையான அத்தியாவசிய பொருட்கள் இடம்பெற்றிருக்கும்.
கால்நடை பராமரிப்புக்காக கால்நடை முகாம்கள் அமைக்கப்பட்டு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் வழங்கப்படுவதுடன், சுமார் 5,000 கால்நடைகளுக்கு உணவும் விநியோகிக்கப்படுகின்றன. விலங்கு மீட்பு மற்றும் அவற்றுக்கான சிகிச்சையில் வந்தாரா குழு ஈடுபட்டுள்ளது. அக்குழு இறந்த கால்நடைகளின் இறுதிச் சடங்குகளையும் நடத்தி வருகிறது.
அதேபோல், தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நெட்வொர்க் இணைப்பை மீட்டெடுக்கும் பணியில் ஜியோ குழு ஈடுபட்டுவருகிறது. ரிலையன்ஸ் ரீடெய்ல், ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து, உள்ளூர் பஞ்சாயத்துகள் மூலம் மிகவும் தேவைப்படும் குடும்பங்களுக்கு ரேஷன் மற்றும் சுகாதாரப் பொருட்களை விநியோகித்து வருகிறது. இந்த நிவாரணத் திட்டம் உடனடி நிவாரணத்திற்காக மட்டுமல்ல, நீண்டகால மறுவாழ்வை மையப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.