[ad_1]
Last Updated:
நேபாளத்தின் இடைக்கால தலைவராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் இரண்டு நாளாக அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில், நேற்று அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி, அதிபர் ராம் சந்திர பவுடல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து அங்கு தற்போது ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறது.
நேபாள அரசு அந்நாட்டில் கடந்த 4ஆம் தேதி முதல் 26 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்தது. இதனையடுத்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் அடிப்படை கோரிக்கையாக, தடைவிதிக்க வேண்டியது சமூக வலைத்தளங்களுக்கு அல்ல ஊழலுக்கு என்பதாகவே இருந்தது.
இதனை அடிப்படையாக கொண்டு பல லட்சம் பேர் நேபாளத்தில் போராட்டத்தில் இறங்கினர். தொடர்ந்து போராட்டம் தீவிரம் அடைந்து, பல விரும்பத்தகாத செயல்களும் நடந்தன.
குறிப்பாக நாடாளுமன்றம், அப்போதைய பிரதமர் சர்மா ஒலி வீடு, அமைச்சர்களின் வீடு உள்ளிட்டவற்றுக்கு தீவைத்து கொளுத்தினர். அந்நாட்டு நிதி அமைச்சர் தன் உயிரை காத்துக்கொள்ள சாலையில் ஓடியபோது அவரை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி அடித்தனர். இவற்றை எல்லாம்விட கொடூரமாக முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகாரை அவரது வீட்டில் அடைத்து வைத்து வீட்டிற்கு தீவைத்தனர். இதில் சிக்கி பலத்த தீக்காயம் அடைந்த ராஜ்யலட்சுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார்.
அதேபோல், போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தச் சூழலில் நேற்று (9ஆம் தேதி) அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி, அதிபர் ராம் சந்திர பவுடல் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்தது. அதன்பிறகு அங்கு இன்று முதல் அமைதி திரும்பியுள்ளது.
கலவரங்கள் ஓய்ந்து அமைதி திரும்பியதை அடுத்து இன்று பல ஆயிரம் இளைஞர்கள் காணொளி காட்சி மூலமாக இணைந்து யாரை அடுத்த அரசியல் தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என விவாதித்தனர். இதில், இளைஞர்களின் தேர்வு காத்மாண்டு மேயர் பாலேன் ஷா மற்றும் நேபாள உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி ஆகியோராக இருந்தது.
இறுதியாக தற்போது முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
September 10, 2025 6:34 PM IST
நேபாளம்: முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி இடைக்கால தலைவர்? இளைஞர்கள் எடுத்த முடிவு!