[ad_1]
Last Updated:
பெண்கள் உட்பட அனைவரும் தடியை எடுத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியதால், அவர்களிடம் சிக்கிய போலீசார் கையெடுத்துக் கும்பிட்டு உயிர் தப்பினர்.
பீகாரில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கச் சென்ற போலீசாரை, கிராம மக்கள் அடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான முந்தைய அரசு, கடந்த 2016 ஆம் ஆண்டும் பூரண மதுவிலக்கை அமல்படத்தியது. இதையடுத்து மது புழக்கம் அடியோடு நிறுத்தப்பட்டதும் மது பிரியர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று மது வாங்கி குடிப்பது அதிகரித்துள்ளது. அதிலும், சில பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதை கட்டுப்படுத்த போலீசார் அவ்வப்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜமுய் மாவட்டத்தில் கடுத்ரி கிராமத்தில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பதுடன், சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே, அங்கு துப்பாக்கியுடன் சென்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டதும் சாராயக் கும்பல் சத்தம் எழுப்பியுள்ளது. அடுத்த நிமிடமே பெண்கள், சிறுவர்கள் என ஒட்டுமொத்த கிராமமும் போலீசாரை நாலாபுறமும் சுற்றி வளைத்துள்ளனர்.
போலீசாரை கண்டதும் சாராயக் கும்பல் தலைதெறிக்க ஓடுவார்கள் என்று பார்த்தால், கிராம மக்கள் போலீசாரை துண்டைக் காணோம் துணியக் காணோம் என ஓடவைத்துள்ளனர். அப்போது, தான் கிராம மக்களின் ஆதரவுடன் மதுபான விற்பனை நடைபெறுவது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. பெண்கள் உட்பட அனைவரும் தடியை எடுத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியதால், அவர்களிடம் சிக்கிய போலீசார் கையெடுத்துக் கும்பிட்டு உயிர் தப்பினர்.
மேலும் ஒரு சிலர் துப்பாக்கியை பறிக்க முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ஒரு பெண் காவலர் உட்பட நான்கு போலீசார் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆறு பெண்கள் உட்பட 13 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சிலரை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். சாராயம் மற்றும் மதுபான விற்பனையை தடுக்க துப்பாக்கியுடன் சென்ற போலீசாரை, கிராம மக்கள் தடியால் அடித்து விரட்டிய சம்பவம் பீகாரில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
September 10, 2025 11:46 AM IST