[ad_1]
Last Updated:
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் என்.டி.ஏ. சார்பில் போட்டியிட்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு என்.டி.ஏ. கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். இதில் 452 வாக்குகளை பெற்று என்.டி.ஏ. கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (9ஆம் தேதி) நடைபெறுகிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543. மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245. இரு அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 788. இதில், மக்களவையில் ஒரு இடமும், மாநிலங்களவையில் 5 இடங்களும் காலியாக உள்ளன.
இதனால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 782-ஆக இருக்கிறது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற 392 வாக்குகள் தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நியமன எம்.பி.க்கள் உட்பட மக்களவையில் 293 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 129 உறுப்பினர்கள் என மொத்தம் 422 எம்.பி.க்கள் உள்ளனர்.
இந்தியா கூட்டணிக்கு நியமன எம்.பி.க்கள் உட்பட மக்களவையில் 249 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 105 உறுப்பினர்கள் என மொத்தம் 354 எம்.பி.க்கள் உள்ளனர். மொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 422 உறுப்பினர்களும், இந்தியா கூட்டணிக்கு 354 உறுப்பினர்களும் உள்ளனர்.
இன்று காலை 10 மணிக்கு துவங்கிய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதில், மொத்தமுள்ள 782 எம்.பி.க்களில் 12 உறுப்பினர்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
இதனையடுத்து பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், என்.டி.ஏ. கூட்டணி சார்பில் போட்டியிட்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியைவிட அதிக வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, மொத்தம் 452 வாக்குகளை பெற்று இந்தியாவின் 15வது குடியரசுத் துணைத் தலைவராக தேர்வாகியுள்ளார். முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
September 09, 2025 7:30 PM IST
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி… வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவு