[ad_1]
Last Updated:
நேபாளத்தில் கலவரக்காரர்கள் அந்நாட்டு முன்னாள் பிரதமரின் மனைவியை வீட்டிற்குள் அடைத்து தீ வைத்துக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாள கலவரக்காரர்கள் முன்னாள் பிரதமரின் மனைவியை அவரது வீட்டிற்குள் அடைத்து தீவைத்து எரித்துள்ளனர். இதில் அவர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு கடந்த 4ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று (8ஆம் தேதி) முதல் அங்கு தீவிரமாக போராட்டம் நடந்துவருகிறது.
இந்தப் போராட்டத்தில் கலவரக்காரர்கள் பிரதமரின் வீடு, அதிபரின் வீடு, நாடாளுமன்றம் உள்ளிட்டவற்றுக்கு தீவைத்துள்ளனர். அந்த வரிசையில், நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டையும் தீ வைத்துக் கொளுத்தினர். இதில், ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார் அந்தத் தீயில் சிக்கி பரிதாபமாக பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தின் செய்தி ஊடகமான கபர் ஹப் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், கலவரக்காரர்களின் ஒரு கும்பல், முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டிற்கு தீவைத்தனர். அப்போது, அவரது மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகாரை அந்த வீட்டிற்குள் அடைத்து தீவைத்தனர். இதில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அருகில் இருந்த தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், பரிதாபமாக பலியானார் எனத் தெரிவித்துள்ளது.
அதே சமயம், முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார் மரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நேபாளம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த சர்மா ஒலி அந்நாட்டில் இருந்து தப்பி ஓடியதாக தகவல் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
September 09, 2025 7:09 PM IST