[ad_1]
Last Updated:
நிலைமை சீரடையும் வரையில் எந்த பயணத்தையும் மேற்கொள்ளாதீர்கள் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்து தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும், ஊழல் நிர்வாகம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை முன் வைத்து இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். அப்போது, காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர்.
இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து நேற்று இரவு சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்குவதாக பிரதமர் அறிவித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலகினர்.
இந்நிலையில், இன்றும் அரசுக்கு எதிரான போராட்டம் நீடித்து வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் சர்மா ஒலியை பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காத்மாண்டுவில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது கற்களை வீசி விரட்டியடித்தனர்.
இத்தகைய சூழலில் நேபாளத்தில் வாழும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிறுத்தலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது-
அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் தங்கள் தற்போதைய வசிப்பிடங்களில் தங்கியிருக்கவும். வெளியே வர வேண்டாம். தெருக்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். அனைத்து எச்சரிக்கையையும் கடைப்பிடிக்கவும்.
நிலைமை சீரடையும் வரையில் எந்த பயணத்தையும் மேற்கொள்ளாதீர்கள். ஏதேனும் உதவி தேவைப்பட்டால், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை பின்வரும் உதவி எண்களில் அழைக்கவும்: 1. +977-980 860 2881 (வாட்ஸ்அப்பிலும் அழைக்கவும்) 2. +977-981 032 6134 (வாட்ஸ்அப்பிலும் அழைக்கவும்),” என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
September 09, 2025 7:18 PM IST
நேபாள வன்முறை போராட்ட எதிரொலி.. இந்தியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்ட மத்திய அரசு