[ad_1]
Last Updated:
இந்தியாவின் குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன், சுதர்சன் ரெட்டி போட்டியிட, 781 எம்பிக்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (9ஆம் தேதி) நடைபெறுகிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கலாம். இதில், நியமன எம்.பி.க்களும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம். ஆனால், நியமன எம்.பி.க்களால் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது. மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543. மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245. இரு அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 788. இதில், மக்களவையில் ஒரு இடமும், மாநிலங்களவையில் 5 இடங்களும் காலியாக உள்ளன.
இதனால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 782-ஆக இருக்கிறது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற 392 வாக்குகள் தேவை.தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நியமன எம்.பி.க்கள் உட்பட மக்களவையில் 293 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 129 உறுப்பினர்கள் என மொத்தம் 422 எம்.பி.க்கள் உள்ளனர்.இந்தியா கூட்டணிக்கு நியமன எம்.பி.க்கள் உட்பட மக்களவையில் 249 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 105 உறுப்பினர்கள் என மொத்தம் 354 எம்.பி.க்கள் உள்ளனர். மொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 422 உறுப்பினர்களும், இந்தியா கூட்டணிக்கு 354 உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்நிலையில், இந்த தேர்தலில் வாக்களிக்க மக்களவை, மாநிலங்களவையில் உள்ள 781 எம்பிக்கள் தகுதிபெற்றுள்ளனர். மேலும் குடியரசுத் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று இரவே அறிவிக்கப்படவுள்ளன.
September 09, 2025 8:42 AM IST