[ad_1]
Last Updated:
காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றதை கண்டு, தலைநகரமே குலுங்கியது.
நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளதால், நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவியுள்ளது. இந்த நிலையில், வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுப்பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
நேபாளத்தில் ஆளும் அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் வகையில் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு என்ற பெயரில் தடை விதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை கண்டித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக கிளர்த்தெழுந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. அதை ஒடுக்க போலீசார் துப்பாக்கியை கையில் எடுத்ததால் போராட்டக்களம் போர்க்களமாக மாறியுள்ளது.
நேபாளத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2008-ல் மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டு, மக்களாட்சி மலர்ந்தது. தற்போது, அங்கு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தமையிலான அரசு ஆட்சில் உள்ளது. அண்மையில் அந்நாட்டில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டது. அதன்படி, சமூக வலைதள நிறுவனங்கள் 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி கெடு விதித்தது. அரசு விதித்த கெடு முடிந்தும் பதிவு செய்யாத ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ் தளம், யூடியூப் உட்பட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆளும் அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் வகையில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், சமூக வலைதளங்களுக்கான தடையை நீக்க கோரி நேபாளம் முழுவதும் கடும் கண்டனக் குரல் எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ‘GEN Z’ புரட்சி என்ற பெயரில் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றதை கண்டு, தலைநகரமே குலுங்கியது.
அவர்களை முன்னேற விடாமல் தடுப்புகளை வைத்து போலீசார் தடுக்க முயற்சித்தனர். ஆனால், போராட்டக்காரர்களின் ஆக்ரோஷத்துக்கு முன்பு இரும்பு தடுப்பு வேலிகள் எல்லாம் சின்னாகிபின்னமாகின. நாடாளுமன்ற கட்டடத்தின் மீது ஏறி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவர்கள், அங்கு பொருட்களுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அப்போது, போலீசாருக்கும் – போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. நிலைமை கையை மீறி செல்வதை உணர்ந்த போலீசார் , கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.
தொடர்ந்து போராட்டக்காரர்களை நோக்கி ரப்பர் குண்டுகள் பாய்ந்தன. ஒரு கட்டத்தில் வன்முறை வெடித்து காத்மாண்டு நகரமே போர்க்களமாக மாறியது. அப்போது, ஆங்காங்கே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கு அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இதனிடையே, புட்வால் (Butwal) நகரிலும், அரசுக்கு எதிராக நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அப்போது, அரசுக்கும், பிரதமர் சர்மா ஒலிக்கும் எதிராகவும் முழக்கமிட்டனர். தலைநகர் காத்மாண்டுவில் GEN Z போராட்டத்தால் அசாதாரண சூழல் ஏற்பட்டதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
September 09, 2025 6:51 AM IST
சமூக வலைதளங்களுக்கு தடை.. போராட்டத்தில் 19 பேர் பலி.. நேபாளத்தை அதிர வைத்த இளம் தலைமுறையினர்!