[ad_1]
Last Updated:
காங்கிரஸ் கட்சி வாக்கு திருட்டு புகாரை எதிர்த்து நாளை இரவு 8 மணிக்கு நாடு முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளது.
வாக்கு திருட்டு புகாரைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் நாளை இரவு போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவில், மோசடி நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளன. அதேபோல பிகார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாக தெரிவித்தார். அதன்படி, தேசிய அளவில், நாளை இரவு 8 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்தப்பட உள்ளது. வாக்கு திருடர்களை, அரியணையை விட்டு வெளியேற்றுவோம் என்ற முழக்கத்துடன் இந்த பேரணி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே கருப்பொருளில் வரும் 21ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை, மாநில அளவிலான பேரணி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை, நாடு தழுவிய கையெழுத்து இயக்கத்தை நடத்தி ஐந்து கோடி கையெழுத்துகளை பெற்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
August 13, 2025 7:07 AM IST
வாக்கு திருட்டு புகார்: தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம் அறிவிப்பு!