[ad_1]
America First என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலடி வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் 50 சதவிகித வரியை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலாகிறது.
இதற்கான நிர்வாக உத்தரவில், கடந்த 6-ஆம் தேதி அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார். இந்நிலையில், புதிய வரி விதிப்பு, இந்திய நேரப்படி வியாழக்கிழமை அமல்படுத்தப்படுகிறது. உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வாங்குவதற்கு ரஷ்யாவுக்கு உதவும் வகையில், அந்நாட்டிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டும் அமெரிக்கா, அதற்காக 25 சதவிகித வரியையும் அபராதமாக விதித்துள்ளது.
ரஷ்யாவுடன் பல ஐரோப்பிய நாடுகள் வர்த்தகம் மேற்கொள்ளும் நிலையில், இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா வரி விதிப்பதாக மத்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. கடுமையான வரிக்கு மத்தியிலும் உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலனை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ள 50 சதவிகித வரி, இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையை கடுமையாக பாதிக்கும். பின்னலாடைகளுக்கு 63.9 விழுக்காடு, நெசவு ஆடைகளுக்கு 60.3 விழுக்காடு, தரைவிரிப்புகளுக்கு 52.9 விழுக்காடு என வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வால், இந்திய ஜவுளிப் பொருட்களின் விலை அமெரிக்க சந்தையில் கடுமையாக உயரும். இதனால், திருப்பூர் உள்ளிட்ட இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உலகிலேயே இந்தியா தான் மிகப்பெரிய வைர வெட்டுதல் மற்றும் மெருகூட்டல் மையமாக உள்ளது. வைரம் மற்றும் விலை உயர்ந்த கற்களுக்கு 52%-க்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வு அமெரிக்காவில் நகைகளின் விலையை அதிகரிக்கும். மேலும், வைரத் துறையில் செயற்கை வைரங்களின் போட்டியால் ஏற்கனவே நெருக்கடி நிலவி வருவதால், இந்த வரி உயர்வு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்கள் மற்றும் காலணிகளுக்கும் இந்த வரி விதிப்பு பொருந்தும். இதனால் தமிழ்நாடு தான் அதிக சுமையை சந்திக்கும்.
கடல் உணவுகள், வாகன உதிரி பாகங்கள், படுக்கை மெத்தை, படுக்கை விரிப்புகள் மற்றும் சில இயந்திரப் பொருட்களும் டிரம்ப்பின் வரி விதிப்பால் பாதிக்கப்படும். சுமார் 55 சதவிகித இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் இந்த வரிவிதிப்பால் பாதிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சில எலெக்ட்ரானிக் பொருட்கள், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
August 26, 2025 6:26 PM IST