[ad_1]
ஷில்லாங், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி. தொழிலதிபரான இவருக்கும் சோனம் என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 11ந்தேதி திருமணம் நடைபெற்றது.புதுமணத் தம்பதி தேனிலவுக்காக மேகாலயா சென்ற நிலையில் திடீரென மாயமானனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி புதுமண தம்பதியைத் தேடி வந்தனர்.இந்நிலையில் ஜூன் 2ந்தேதி ராஜா ரகுவன்ஷியின் உடல் அங்குள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் புதருக்குள் கண்டெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் சோனத்தை காணவில்லை என்பதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சில நாட்கள் கழித்து சோனம் போலீசில் சரணடைந்தார்.
விசாரணையில், அவர் தனது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தது தெரியவந்தது.திருமணத்திற்கு முன்பே சோனம், ராஜ் குஷ்வாஹாவை காதலித்து வந்தார். ஆனால் இந்தக் காதலை சோனத்தின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. எனவே விருப்பமின்றி ராஜா ரகுவன்ஷியை திருமணம் செய்த சோனம், தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்யத் திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சோனம், அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா, அவரது கூட்டாளிகள் ஆகாஷ் ராஜ்பூத், விஷால் சிங் சவுகான், ஆனந்த் குருமி என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை சோஹ்ரா துணைப் பிரிவு முதலாம் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கில் 790 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேகாலயா போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 5 பேரில் முதல் குற்றவாளியாக சோனம், இரண்டாவது குற்றவாளியாக ராஜ் குஷ்வாஹா சேர்க்கப்பட்டுள்ளனர். 5 பேர்மீதும் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் 103 (1) பிரிவு, 238 (A) மற்றும் 61 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் கொலைக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் தடயவியல் அறிக்கை கிடைத்த பிறகு துணைக் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.