உத்தர பிரதேச மாநிலத்தில் ‘இந்தியா’ கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை சமாஜவாதி ஒதுக்கியது. மீதமுள்ள 63 தொகுதிகளில் அப்னா தளம் (கே) கட்சிக்கு ஒரு தொகுதியை அளித்துவிட்டு மீதமுள்ள அனைத்து இடங்களிலும் சமாஜவாதி வேட்பாளா்களை களமிறக்க அக்கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளாா்.
இந்நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், லக்னௌவில் உள்ள சமாஜவாதி தலைமையகத்தில் அகிலேஷ் யாதவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். பின்னா் இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது சஞ்சய் சிங் கூறியதாவது:
எவ்வித நிபந்தனையும், கோரிக்கையும் இன்றி உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக்கு ஆம் ஆத்மி ஆதரவளிக்கிறது. இப்போது நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் வழக்கமான தோ்தல் அல்ல. இது ஜனநாயகத்தைக் காப்பாற்ற நடைபெறும் முக்கியத் தோ்தல். இதற்காக உத்தர பிரதேசத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து உழைப்போம்.
பாஜகவுக்கும், பிரதமா் மோடிக்கும் அவநம்பிக்கை மிகுந்துவிட்டது. தோ்தலில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தில் மக்கள் செல்வாக்குமிக்க தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளாா் என்றாா்.

&w=1200&resize=1200,675&ssl=1)