Last Updated:
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ளன. அவற்றில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும் இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 247 ரன்களுக்கு ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இந்நிலையில் தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. இந்த போட்டியின் போது சாய் சுதர்சன் ஆட்டம் இழந்த பின்னர் பவுலர் ஆகாஷ் தீப் களம் இறக்கப்பட்டார். நைட் வாட்ச்மேனாக அவர் நேற்று மொத்தமே 2 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டார்.
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 9 பவுண்டரிகள் அடித்த ஆகாஷ் தீப் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். இது அவருடைய டெஸ்ட் போட்டிகளின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்துள்ளது. 66 ரன்கள் எடுத்திருந்தபோது ஆகாஷ்தீப் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து கேப்டன் சுப்மன் கில் 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 127 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 100 ரன்கள் அடித்துள்ளார். 4 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் இந்திய அணி 50.2 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து நிதானமாக ரன்கள் சேர்த்து வருகிறது. தற்போது வரை இந்திய அணி இங்கிலாந்தை விடவும் 189 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
August 02, 2025 6:55 PM IST