பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக 289 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமான வரி செலுத்தாததற்காக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
அவர் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்துவதைத் தவிர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் விராஞ்சித் தம்புகல என்ற பிரபல தொழிலதிபரும் அந்த இரண்டு ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்தத் தவறிவிட்டார் என்றும் அந்த திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வரி குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கைகள் நேற்று (01) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் அழைக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு வரி ஏய்ப்பு செய்ததற்காக பியுமி ஹன்சமாலி மற்றும் அவுரா லங்கா தலைவர் விராஞ்சித் தம்புகல ஆகியோருக்கு எதிராக எதிர்காலத்தில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாமல், நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக இந்த இரண்டு சந்தேக நபர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. R