பெங்களூரு: வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடகாவின் ஹசன் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மூன்று பாலியல் வன்கொடுமை வழக்குகள், ஒரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு என 4 வழக்குகள் உள்ளன. எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளுக்கான சிறப்பு அமர்வு நீதிமன்றம் ரேவண்ணாவின் வழக்குகளை விசாரித்து வருகிறது.
இதில், ரேவண்ணாவின் குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் உதவியாளராக இருந்த 48 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு விசாரணை கடந்த மே 2-ம் தேதி தொடங்கியது. நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் வழக்கை விசாரித்து வந்தார். மூத்த வழக்கறிஞர்கள் அசோக் நாயக் மற்றும் பி.என். ஜெகதீஷா ஆகியோர் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை தினசரி நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்து, பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை குற்றவாளி என இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தண்டனை குறித்த வாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தண்டனை விவரம் நாளை (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.