லங்காவி,
மூன்று வயது சிறுமி நூர் ஐஷா கொலை வழக்கில், கடந்த ஆறு வருடங்களாக நீடித்த விசாரணைக்கு பின்னர், அலோர் ஸ்டார் உயர்நீதிமன்றம் ரம்லான் அப்துல் ரஷீத் (44) என்பவருக்கு தூக்குத்தண்டனை வழங்கியது.
சிறுமியின் உடல் 2019ஆம் ஆண்டு லங்காவியில் உள்ள குனுங் ராயா காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
“குழந்தை நீண்ட நாட்களாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டதால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. குற்றவாளி எந்தவித மனிதநேயமும் இல்லாமல் குழந்தையின் உடலை காட்டில் வீசியுள்ளார். இதுவே அவர் இரக்கமற்றவர் என்பதை காட்டுகிறது,” என நீதிபதி Evawani Farisyta எழுத்துப்பூர்வத் தீர்ப்பில் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த 2018 ஆம் ஆண்டு, சிறுமியின் தாயும் குழந்தையும் இந்த குற்றவாளியான ஆண் வசிக்கும் மருத்துவமனை ஊழியர் குடியிருப்பில் இருந்தனர். குற்றவாளியின் மனைவி ஒரு நர்ஸ். தினமும் வேலைக்குச் செல்லும்போது இந்த (சிறுமியின்) தாய் குழந்தையை பராமரிக்க இந்த ஆணிடம் விட்டிருந்தார்.
2019 ஆம் ஆண்டு ஜனவரியில், தாயாருக்கு வேலை இடத்தில் விடுதி வழங்கியதையடுத்து, குழந்தை மட்டும் குற்றவாளியுடன் தங்கி இருந்தது. ஆனால் பிப்ரவரி மாதம் சிறுமியின் தாய் வீட்டுக்கு வந்துபோது குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்தார்.
மார்ச் 2019 இல், போலீசாரின் விசாரணையின்போது, குற்றவாளி உண்மையை மூடி மறைத்தபோதிலும், விசாரணையின் பின்னர் நடந்த தேடுதல் வேட்டையில் காட்டுப்பகுதியில் சிறுமியின் தோள்பட்டை எலும்புகள் மற்றும் பற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் செய்த டி.என்ஏ பரிசோதனையில், அவை புகார் அளித்தவரின் மகளுக்கே சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் துணை வழக்கறிஞர் மொஹ்த் ரிஸால் பாஸில் முன்னிலையாக இருந்தார். குற்றவாளிக்கான சட்டத்தரணியாக Ai Cha Ran என்பவர் ஆஜரானார்.
இது நாட்டை உலுக்கிய ஒரு கொடூரமான குழந்தை கொலை வழக்காக அப்போது பேசப்பட்டது. காலம் கடந்து நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்றாலும், ஒரு குழந்தையின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது.
The post மூன்று வயது சிறுமியின் கொலை: கொலைகாரனுக்கு தூக்குத்தண்டனை appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.