முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், கர்நாடகா மாநிலம் ஹாசன் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது கடந்த 2024ஆம் ஆண்டு பாலியல் புகார்கள் எழுந்தன. மேலும், அவர் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் கசிந்தன.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் மீது 48 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அவர் தனது புகாரில், தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் பண்ணை வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்துவந்ததாகவும், 2021ஆம் ஆண்டு முதல் ரேவண்ணாவின் பண்ணை வீட்டிலும், பெங்களூருவில் உள்ள பசவனகுடியில் உள்ள அவரது வீட்டிலும் பல முறை தன்னை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், அதனை வீடியோவாக எடுத்துவைத்து, வெளியில் சொன்னால் இணையத்தில் வீடியோக்களை பரவவிட்டுவிடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார். இவரின் புகாரை ஏற்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்தப் புகார் எழுந்தது பலரையும் அதிர்ச்சியில் உறையவைத்தது. இந்தப் புகார் எழுந்ததும், பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். அதன்பிறகு தேவகௌடா வலியுறுத்தலின் காரணமாக ஜெர்மனியில் இருந்து மே 31, 2024 அன்று இந்தியா திரும்பினார். அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பெங்களூருவில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் முன் விசாரணை நடைபெற்றுவந்தது.
ஆகஸ்ட் 2024 இல் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால், அவர் தொடர்ந்து சிறையில் இருந்துவருகிறார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் இன்று (ஆக். 1ஆம் தேதி) பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என அறிவித்து, அவருக்கான தண்டனை விவரங்கள் நாளை (ஆக். 2ஆம் தேதி) அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து உத்தரவிட்டுள்ளார்.
August 01, 2025 3:12 PM IST