இந்த நபர் பங்குச் சந்தையில் பணத்தை இழக்கவில்லை. அவர் இழந்தது ஃபிக்சட் டெபாசிட்டில். கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? அவரது ரூ.25,000 ஒரே நாளில் போய்விட்டது. இது குறித்து பட்டயக் கணக்காளரும், நிதி ஆலோசகருமான அபிஷேக் வாலியா சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
“என்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவர் தனது தந்தையின் அறுவை சிகிச்சைக்கு அவசரமாக நிதி ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. அதற்காக தனது நான்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் உள்ள பணத்தை எடுத்தார். இந்த திட்டங்கள் முதிர்ச்சி அடைய இன்னும் 1.5 ஆண்டுகளுக்கு மேல் இருந்தன. விளைவு? அவர் ரூ.25,000 தொகையை அபராதமாக இழந்தார்”
ஃபிக்ஸட் டெபாசிட் அவசரகால நிதி அல்ல
ஃபிக்ஸட் டெபாசிட் பாதுகாப்பானவை என்பதால் மக்களிடையே பிரபலமாக உள்ளன. ஆனால், அவை திடீரென பணம் எடுப்பதற்காக வடிவமைக்கப்படவில்லை. அவை லாக்-இன் காலங்களுடன் வருகின்றன. அவற்றிலிருந்து முன்கூட்டியே பணம் எடுப்பது இழப்பை ஏற்படுத்துகிறது.
ஒரு ஃபிக்ஸட் டெபாசிட் முன்கூட்டியே முறிக்கப்படும்போது, வங்கிகள் பின்வருவனவற்றைப் பயன்படுத்துகின்றன:
- ஃபிக்ஸட் டெபாசிட் வைத்திருந்த உண்மையான காலத்திற்குப் பொருந்தும் வகையில் குறைந்த வட்டி விகிதம்.
- வட்டியில் பொதுவாக 0.5% முதல் 1% வரை அபராதம் விதிக்கப்படும்.
- ஏற்கனவே திரட்டப்பட்ட வட்டி மீதான எதிர்கால வட்டித்தொகை இழக்கப்படுகிறது.
- இந்தக் காரணிகள் இணைந்து நீங்கள் எதிர்பார்த்த தொகைக்கும், உண்மையில் பெறுவதற்கும் இடையே குறிப்பிடத்தக்க இடைவெளியை உருவாக்கக்கூடும்.
ஃபிக்ஸட் டெபாசிட்கள் திடீர் பணப்புழக்கத்திற்காக அல்ல; அவை செல்வத்தைப் பாதுகாப்பதற்கானவை என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
குறைந்தப்பட்சம் 6 மாத செலவுகளை மியூச்சுவல் ஃபண்டில் அல்லது ஒரு ஸ்வீப்-இன் ஃபிக்ஸட் டெபாசிட்டில் வைத்திருங்கள். இது சிறந்த நெகிழ்வுத் தன்மையை அளிக்கிறது. இவை உங்கள் நீண்டகால சேமிப்பைப் பாதிக்காமல் விரைவான அணுகலை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
முன்கூட்டியே தொகையை திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகளைப் புரிந்துகொள்தல்:
சில ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் முன்கூட்டியே பணம் எடுக்க அனுமதிக்கின்றன என்றாலும், விதிமுறைகள் ஒவ்வொரு வங்கிகளுக்கு இடையே வேறுபடுகின்றன. சில வங்கிகள் இந்த வசதியை அபராதம் இல்லாமல் வழங்கினாலும், பெரும்பாலானவை வட்டி விகிதத்தில் 0.5% முதல் 1% வரை கட்டணம் வசூலிக்கின்றன. திட்டம் தொடங்கிய 7 நாட்களுக்குள் ஃபிக்ஸட் டெபாசிட்டை முறித்துக்கொண்டால், உங்களுக்கு எந்த வட்டியும் கிடைக்காமல் போகலாம்.
August 01, 2025 9:48 PM IST