இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று வியாழக்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் இரு தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
கடைசி டெஸ்டுக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. பந்து தாக்கி கால்பாதத்தில் எலும்பு முறிவுக்குள்ளான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விலகி விட்டார்.
இதே போல் ‘நம்பர் ஒன்’ வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு கொடுக்கும்படி கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் களம் காணுகிறார். இதே போல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடத்தை துருவ் ஜூரெல் நிரப்புகிறார். ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.
இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. 4-வது டெஸ்டில் வலது தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உடல்தகுதியை எட்டவில்லை.
இதனால் முக்கியமான இந்த டெஸ்டில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது. அவருக்கு பதிலாக துணை கேப்டன் ஆலி போப் அணியை வழிநடத்துகிறார்.
இதே போல் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் லியான் டாசன், பிரைடன் கார்ஸ் கழற்றி விடப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல், அட்கின்சன், ஜேமி ஓவர்டான், ஜோஷ் டாங்கு ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.