Last Updated:
பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது ராணுவ ஆலோசனையில் இருந்ததால் அழைப்பை ஏற்கவில்லை என தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்தான விவாதத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று துவக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. பல்வேறு எம்.பி.க்கள் பேசிய நிலையில், இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் இந்த விவாதத்தின் மீது பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ராணுவத்தை சண்டைக்கு அனுப்பினால் என்ன நடக்கும் என்பது கூட பாஜக அரசுக்கு தெரியவில்லை. தனது இமேஜை காக்க ராணுவத்தை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். நமது படைகளை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துவது அபாயகரமானது. இந்திய ராணுவத்தின் கைகளை பின்னால் கட்டாதீர்கள்” என ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசினார்.
அவரைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், “தீவிரவாதத்தின் மையத்தை வேரோடு பெயர்த்துள்ளோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதே நமது இலக்கு என்பதை உரியவர்களுக்கு உணர்த்தியுள்ளோம்.
போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் மன்றாடியது. நாம் போரை தீவிரப்படுத்த விரும்பாததால் போரை நிறுத்தினோம். போரை நிறுத்தும்படி நம்மிடம் யாரும் (டிரம்ப்) கோரவில்லை. உலகின் எந்தத் தலைவரும் போரை நிறுத்த நிர்ப்பந்திக்கவில்லை.
அமெரிக்க துணை அதிபர் மே 9ஆம் தேதி இரவு என்னுடன் பேச முயன்றார். நான் ராணுவத்துடன் ஆலோசனையில் இருந்ததால் அவரது அழைப்பை ஏற்கவில்லை. ஒரு மணி நேரமாக என்னிடம் பேசுவதற்காக அவர் முயற்சித்தார்.
பின்னர், நான் அவரைத் திரும்ப அழைத்தபோது, பாகிஸ்தான் ஒரு பெரிய தாக்குதலை நடத்தப் போகிறது என்று அமெரிக்க துணை ஜனாதிபதி தொலைபேசியில் என்னிடம் கூறினார். பாகிஸ்தானுக்கு இந்த நோக்கம் இருந்தால், அது அவர்களுக்கு நிறைய இழப்பை ஏற்படுத்தும். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், நாங்கள் ஒரு பெரிய தாக்குதலை நடத்துவதன் மூலம் பதிலடி கொடுப்போம் என அவருக்கு பதில் அளித்தேன்” எனத் தெரிவித்தார்.
July 29, 2025 7:21 PM IST
“ஒரு மணி நேரமாக அமெரிக்க துணை அதிபர் என்னிடம் பேச முயற்சித்தார்… நான் அழைப்பை எடுக்கவில்லை” – பிரதமர் மோடி