நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்தான விவாதத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று துவக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. பல்வேறு எம்.பி.க்கள் பேசிய நிலையில், இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் இந்த விவாதத்தின் மீது பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ராணுவத்தை சண்டைக்கு அனுப்பினால் என்ன நடக்கும் என்பது கூட பாஜக அரசுக்குத் தெரியவில்லை. தனது இமேஜை காக்க ராணுவத்தை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். நமது படைகளை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துவது அபாயகரமானது. இந்திய ராணுவத்தின் கைகளை பின்னால் கட்டாதீர்கள்” என ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசினார்.
அவரைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது; “ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் நிலை என்ன என்பதை விளக்கவே இங்கு வந்துள்ளேன். ஆபரேஷன் சிந்தூரின் பின்னணியை அறியாமல் இருளில் இருப்பவர்களுக்கு விளக்கம் தருகிறேன். பஹல்காம் தாக்குதல் மனிதாபிமானத்தின் மீதான மிகப்பெரும் கறை. பஹல்காம் தாக்குதல் இந்தியா, இந்திய மக்களுக்கு எதிரான சதித் திட்டம்.
பஹல்காம் தாக்குதல் இந்தியர்களை மத ரீதியாக பிளவுபடுத்த விதையாகத் தூவப்பட்டது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த கொடூரமான சம்பவம், அப்பாவி மக்களை அவர்களின் மதம் பற்றி கேட்ட பிறகு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது, கொடுமையின் உச்சம். இது இந்தியாவை வன்முறையின் நெருப்பில் தள்ள நன்கு திட்டமிடப்பட்ட முயற்சி. இது இந்தியாவில் கலவரங்களைப் பரப்புவதற்கான ஒரு சதி. நாடு ஒற்றுமையுடன் அந்த சதியை முறியடித்ததற்காக இன்று நாட்டு மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு முழு சுதந்திரம் தரப்பட்டது. முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதால் இந்திய ராணுவம் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை ஈட்டியது. பாகிஸ்தான் மண்ணில் ஊடுருவி பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தோம். பயங்கரவாதிகளை அவர்களின் மறைவிடத்தில் வைத்தே அழித்தோம்.
ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. எப்போது, எங்கே, எப்படி என்பதை முடிவு செய்யுமாறு அவர்களிடம் கூறப்பட்டது. பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டனர் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். பயங்கரவாத மூளையாக இருந்தவர்கள் இன்றுவரை தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கிறார்கள்.
பாகிஸ்தான் அணுகுண்டு மிரட்டல் விடுத்தது. ஆனால், அதற்கு அஞ்சாமல் பதிலடி கொடுத்தோம். பாகிஸ்தான் வாலாட்டி பார்த்தது. ஆனால், அதனை மண்டியிட வைத்தோம். இந்தியாவின் தயாரான ஏவுகணைகள் பாகிஸ்தானுக்குத் தக்க பாடத்தைப் புகட்டின.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்கும் என்ற எண்ணம் பாகிஸ்தான் படைகளுக்கு இருந்தது. அவர்கள் அணு ஆயுத அச்சுறுத்தல்களை விடுக்கத் தொடங்கினர். மே 6-7 இடைப்பட்ட இரவில், இந்தியா முடிவு செய்தபடியே நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. நமது ராணுவம் 22 நிமிடங்களுக்குள் துல்லியமான தாக்குதல்கள் மூலம் பழிவாங்கின.
பாகிஸ்தானுக்கு மூன்று நாடுகள் மட்டுமே ஆதரவு அளித்தன. 190 நாடுகள் ஆதரவு அளிக்கவில்லை. உலகமே இந்தியாவை ஆதரித்தது. ஆனால், காங்கிரஸ் நமது படைகளுக்குத் துணை நிற்கத் தவறிவிட்டது. இந்திய அரசையும், பாதுகாப்புப் படைகளையும் மட்டம் தட்டவே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முயன்றன.
பாகிஸ்தானில் பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. அங்கு செல்ல முடியும் என்று யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாது. பஹாவல்பூர், முரிட்கேவும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. நமது படைகள் பயங்கரவாத தளங்களை அழித்துவிட்டன.
பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல் பொய்யானது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. இந்த அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியாவும் தலைவணங்காது.
இந்தியா தனது தொழில்நுட்ப திறனைக் காட்டியுள்ளது. இது பாகிஸ்தானின் மார்பில் துல்லியமாகத் தாக்கியுள்ளது. பாகிஸ்தானின் விமான தளங்களும் சொத்துக்களும் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. இன்றுவரை, அவர்களின் பல விமான தளங்கள் ஐசியுவில் உள்ளன. இது தொழில்நுட்ப அடிப்படையிலான போரின் சகாப்தம்.
கடந்த 10 ஆண்டுகளில் நாம் செய்த தயாரிப்புகளை நாம் செய்யாவிட்டால், இந்த தொழில்நுட்ப சகாப்தத்தில் நாம் எவ்வளவு இழப்பைச் சந்தித்திருப்போம் என்பதை நாம் கற்பனை செய்யலாம்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம், முதல் முறையாக, உலகம் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவின் சக்தியை அங்கீகரித்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள், ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஆயுத அமைப்பை அம்பலப்படுத்தின.
ஆபரேஷன் சிந்தூர்; இந்தியா 3 புள்ளிகளில் முடிவு செய்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஒன்று, இந்தியாவின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தால், நாங்கள் எங்கள் சொந்த முறையில், எங்கள் நிலைமைகள் மற்றும் எங்கள் நேரத்திற்கு ஏற்ப பதிலடி கொடுப்போம். இரண்டு, இப்போது எந்த அணுசக்தி மிரட்டலும் வேலை செய்யாது. மூன்று, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கங்களையும் பயங்கரவாத மூளைகளையும் இரண்டு தனித்தனி நிறுவனங்களாக நாங்கள் பார்க்க மாட்டோம்.
தீவிரவாதத்தின் மையத்தை வேரோடு பெயர்த்துள்ளோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதே நமது இலக்கு என்பதை உரியவர்களுக்கு உணர்த்தியுள்ளோம். போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் மன்றாடியது. நாம் போரை தீவிரப்படுத்த விரும்பாததால் போரை நிறுத்தினோம். போரை நிறுத்தும்படி நம்மிடம் யாரும் (டிரம்ப்) கோரவில்லை. உலகின் எந்தத் தலைவரும் போரை நிறுத்த நிர்ப்பந்திக்கவில்லை” என பேசினார்.
July 29, 2025 8:15 PM IST
“பஹல்காம் தாக்குதல் இந்தியர்களை மத ரீதியாக பிளவுபடுத்த விதையாகத் தூவப்பட்டது” – பிரதமர் நரேந்திர மோடி