Last Updated:
Nimisha Priya | கடந்த 16ஆம் தேதி, நிமிஷா பிரியாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட வழக்கில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து என்று வெளியான தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அங்கு ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்துல் மஹ்தி என்பவருடன் இணைந்து தனியாக க்ளினிக் நடத்தி வந்த நிலையில், தலால் அப்துல் மஹ்தியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த மரண தண்டனையை தடுக்க இந்திய அரசு தூதரக ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய மதத் தலைவரான அபுபக்கர் முஸ்லியார், ஏமன் நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
கடந்த 16ஆம் தேதி, நிமிஷா பிரியாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நிமிஷா பிரியாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இஸ்லாமிய மதத் தலைவரான அபுபக்கர் முஸ்லியார் அறிவித்தார். ஆனால், இந்த தகவல் தவறானது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, முஸ்லியார் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது” என்று கூறப்பட்டிருந்தது.
July 29, 2025 3:26 PM IST