காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவி விலகியதுபோல உள்துறை அமைச்சர் அமித் ஷா இப்போது பதவி விலகுவாரா? என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பேசுகையில்,
“பாதுகாப்புத் துறை அமைச்சர் நேற்று ஒரு மணி நேரம் பேசினார். பயங்கரவாதம், நாட்டைப் பாதுகாப்பது பற்றிப் பேசிய அவர் வரலாற்றுப் பாடத்தையும் நடத்தி முடித்தார். ஆனால் இதில் ஒரு விஷயம் விடுபட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் எப்படி நடந்தது? தாக்குதல் நடந்தபோது அங்கு ஏன் ஒரு பாதுகாப்புப் பணியாளர்கூட இல்லை.
காஷ்மீர் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு கூறியதை நம்பி சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாக அங்கு தாக்குதல் நடந்துள்ளது.
மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பொறுப்பல்லவா?
பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. 2021-க்கு பின் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. அதற்கெல்லாம் யார் பொறுப்பு?
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததற்கு பொறுப்பேற்று அப்போதைய உள்துறை அமைச்சர் பதவி விலகினார். அதேபோல பஹல்காம் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, உளவுத்துறை தலைவர் பதவி விலகுவார்களா?
இந்த அரசு எப்போதும் கேள்விகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது. அவர்களுக்குப் பொறுப்பு இல்லை. உண்மை என்னவென்றால், அவர்களின் இதயத்தில் மக்களுக்கு இடமில்லை. அவர்களுக்கு எல்லாமே அரசியல், விளம்பரம் மட்டும்தான்.
நேருவும் இந்திரா காந்தியும் என்ன செய்தார்கள் என்பது பற்றி இன்று மத்திய உள்துறை அமைச்சர் பேசினார். அவர் என் தாயின் கண்ணீர் பற்றி கூடப் பேசினார். ஆனால் போர் நிறுத்தம் ஏன் அறிவிக்கப்பட்டது என்பதற்கு அவர் ஒருபோதும் பதிலளிக்கவில்லை.
அமித் ஷா, என்னுடைய தாயார் சோனியா காந்தியின் கண்ணீர் பற்றி பேசியதற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். பயங்கரவாதிகள் என் தந்தை ராஜீவ் காந்தியைக் கொன்றபோது என் தாய் கண்ணீர் சிந்தினார். இன்று பஹல்காமில் கொல்லப்பட்ட அந்த 26 பேரைப் பற்றி நான் பேசும்போது அவர்களின் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
இங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அன்று 26 பேரும் தங்கள் குடும்பத்தினரின் முன்பாகவே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நீங்கள் உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது” என்று பேசியுள்ளார்.