செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள், போலி வீடியோக்களைப் பயன்படுத்துவது, அதிகாரிகளுக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாகத் துணை உள்துறை அமைச்சர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.
இன்று மக்களவையில் பேசிய துணை அமைச்சர், இது போன்ற தவறு செய்பவர்களின் டிஜிட்டல் தரவுகளான ஐபி முகவரிகள் மற்றும் பயனர் அடையாளங்கள் போன்றவற்றை அடையாளம் காண முடியும் என்றாலும், வழக்குத் தொடரும் செயல்பாட்டில் காவல்துறை இன்னும் பல தடைகளை எதிர்கொள்கிறது என்பதை எடுத்துரைத்தார்.
குற்றவாளிகள் AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதும், அவர்களில் சிலர் போலி தொழில்நுட்பம்மூலம் குழந்தைகளின் பொருத்தமற்ற படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதும் இத்தகைய தடைகளில் அடங்கும் என்று அவர் கூறினார்.
“Deepfake அத்தகைய பொருட்களின் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மையைச் சரிபார்ப்பதில் குறிப்பிடத் தக்க சவால்களை ஏற்படுத்துகிறது. கையாளப்பட்ட அல்லது பொய்யான சான்றுகள் நீதிமன்ற நடவடிக்கைகளின்போது அதன் சான்று மதிப்பைப் பலவீனப்படுத்தக்கூடும்,” என்று ஷம்சுல் மேலும் கூறினார்.
மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள் போன்ற மறைக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதும், டிஜிட்டல் ஆதாரங்களை நீக்குவது அல்லது குறியாக்கம் செய்வதும் காவல்துறையின் தடயவியல் தடமறிதல் முயற்சிகளைச் சிக்கலாக்குகிறது என்றும் அவர் கூறினார்.
குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கம் ஆன்லைனில் பரவுவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள்குறித்து சட்டமன்ற உறுப்பினர் இஸ்கந்தர் சுல்கர்னைன் அப்துல் காலித்தின் (Independent-Kuala Kangsar) கூடுதல் கேள்விக்குப் பதிலளித்த துணை அமைச்சர் இவ்வாறு கூறினார்.
குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட அதிக எண்ணிக்கையிலான ஐபி முகவரிகள், நாட்டின் சைபர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் தற்போதைய அமலாக்க நடவடிக்கைகளில் உள்ள பலவீனங்களின் அறிகுறியாக அரசாங்கம் நம்புகிறதா என்றும் கோலா காங்சர் எம்.பி. கேட்டிருந்தார்.
பலவீனம் அல்ல
இதற்குப் பதிலளித்த ஷம்சுல், தற்போதுள்ள சைபர் கண்காணிப்பு அல்லது அமலாக்க அமைப்புகளில் கண்டறியப்பட்ட அதிக எண்ணிக்கையிலான ஐபி முகவரிகளை உள்துறை அமைச்சகம் ஒரு பலவீனமாகக் கருதவில்லை என்றார்.
“மாறாக, (குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களில் உள்ள கண்டறியப்பட்ட ஐபி முகவரிகளின்) இந்த அதிகரிப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி மற்றும் இணையத்தின் வளர்ந்து வரும் அணுகலின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.
“சர்வதேச சைபர் அறிக்கையிடல் அமைப்புகள் அதிகமான சம்பவங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை அடையாளம் காண உதவியுள்ளன, இது பதிவான ஐபி முகவரிகளின் அதிகரிப்புக்கு பங்களித்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட காவல்துறை தரவுகள், 100,000க்கும் மேற்பட்ட மலேசிய ஐபி முகவரிகள் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வலைத்தளங்களை அணுகியதாகக் குறிப்பிடுகின்றன.
2015 ஆம் ஆண்டில் இது போன்ற ஆன்லைன் பக்கங்களை அணுகியதாகக் கண்டறியப்பட்ட 17,000 ஐபி முகவரிகளுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கூர்மையான அதிகரிப்பாகும்.
90 சதவீத தண்டனை விகிதம்
2021 முதல் இன்று வரை, குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைத் தயாரித்தல், வைத்திருத்தல், விநியோகித்தல், அணுகல், பதிவிறக்கம் செய்தல் மற்றும் பதிவேற்றம் செய்தல் தொடர்பான 287 வழக்குகளைப் போலீசார் விசாரித்துள்ளதாக ஷம்சுல் கூறினார்.
குழந்தைகள்மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 4 முதல் 10 வரையிலான கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், இதன் விளைவாக 90 சதவீத தண்டனை விகிதம் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
“குழந்தைகள் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்”.
“(குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை எதிர்த்துப் போராடுவது) இந்தப் பொறுப்பைக் காவல்துறை மட்டும் சுமக்கவில்லை, மாறாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழாமல் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒட்டுமொத்த சமூகமும் பகிர்ந்து கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.