Last Updated:
கடந்த 16ம் தேதி லாவண்யா தனது தந்தையுடன் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கினார்.
தெலங்கானா மாநிலத்தில் விபத்தில் உயிரிழந்த மகளின் உடலை மருமகன் வீட்டிற்கு எடுத்துச் சென்று, வரதட்சணையாகக் கொடுத்த பணம் மற்றும் நகைகளை திருப்பிக் கேட்டு இரண்டு நாட்களாக மாமியார் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் ராமகிருஷ்ணப்பூர் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த லாவண்யா என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
சுரேஷ் சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்தின்போது லாவண்யாவின் பெற்றோர் 50 லட்சம் ரூபாய் ரொக்கமும், 25 சவரன் நகையும் வரதட்சணையாகக் கொடுத்ததாகத் தெரிகிறது. சில காலம் இரண்டு பேரும் சேர்ந்து வசித்து வந்த நிலையில், பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு லாவண்யா கணவரோடு சண்டை போட்டு பிறந்த வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி லாவண்யா தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கினார். விபத்தில் லாவண்யாவின் தந்தை அதே இடத்தில் மரணம் அடைந்த நிலையில், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற லாவண்யாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்து விட்டார்.
இதையடுத்து, லாவண்யாவின் உடலை கணவர் சுரேஷ் வீட்டிற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர். அங்கு, நாங்கள் திருமணத்தின் போது வரதட்சணையாகக் கொடுத்த 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 30 சவரன் தங்க நகை ஆகியவற்றை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்வோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் லாவண்யா குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமாதானம் அடைந்த குடும்பத்தினர் உடலை எடுத்துச் சென்று இறுதிச்சடங்குகளை மேற்கொண்டனர்.
July 29, 2025 7:03 AM IST