புத்ராஜெயா,
போலி வீசா ஆவணங்களை கொண்டு மலேசியாவில் நுழைய முயன்ற ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நால்வர் – ஒருவர் ஆண், மூவர் பெண் – கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமலாக்கப் பிரிவினரால் (AKPS) KLIA டெர்மினல் 1-ல் நடத்திய பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையின் போது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நால்வரும் ஜூலை 24ஆம் தேதி இரவு 9.20 மணியளவில் Emirates Airlines-இன் EK342 என்ற விமானம் மூலம் மலேசியாவிற்கு வந்துள்ளனர். இருப்பினும், அவர்கள் வருகையின் பின்னர் குடிநுழைவு கவுன்டரில் பதிவுசெய்யப்படாமல் விமான நிலைய வளாகத்திலேயே நான்கு நாட்கள் சுற்றித்திரிந்ததை KLIA டெர்மினல் 1 கண்காணிப்பு அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
முதல் நிலை விசாரணையின் போது, இந்த நால்வரும் தமது பயண ஆவணங்களில் உள்ள வீசாக்கள் போலியானவை எனத் தெரியவந்தது. மேலும், அவர்கள் கூறியபடி யூஸ்பெகிஸ்தானை transit நாடாக பயன்படுத்தியதற்கான பதிவுகளோ ஆதாரங்களோ எதுவும் இல்லை. அவர்கள் US$6,000 (RM25,386) செலுத்தி ஒரு முகவரிடம் இருந்து இந்த போலி வீசாக்களை பெற்றனர் என ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மலேசிய குடிவரவு சட்டங்களை மீறியதற்காக, நால்வருக்கும் “Not To Land” (NTL) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக AKPS தெரிவித்துள்ளது. அவர்கள் ஜூலை 30ஆம் தேதி Emirates Airlines விமானம் மூலம் தங்கள் தாய்நாடான ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிநுழைவு கட்டுப்பாட்டை கடுமையாக நிறைவேற்றும் வகையில், போலி ஆவணங்கள், இடைநிறுத்த நாடு வழியாக ஏமாற்ற முயற்சி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து கண்காணிப்பும், தடுப்பும் மேற்கொள்ளப்படும் என AKPS, கூறியுள்ளது.