மலாக்கா:
ஜாசின் பெஸ்தாரி பகுதியில் நேற்று மாலை 7.26 மணியளவில் நடந்த வன்முறை சம்பவத்தில் , இந்திய நாட்டவரான ஒருவரை பொதுமக்கள் தாக்கியதன் விளைவாக அவர் உயிரிழந்ததாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ சுல்கையிரி பின் முக்தார் தெரிவித்ததாவது, சம்பவம் ஜாசின் மைடின் பேரங்காடி அருகே நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இறந்த நபர், தனது அந்தரங்க உறுப்பை பொதுமக்கள் முன்னிலையில் வெளிக்காட்டியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, இருவர் அவரைத் தடுக்க முயன்ற போதும் அவர் ஓடிவிட்டதாகவும், பின்னர் சிலர் அவரை பிடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த தருணத்தில், ஒருவர் அவரை முகத்தில் குத்தியதாக ஒப்புக்கொண்டார்.
மேலும், அவர் அருகிலுள்ள புதர்களை கடந்து ஓடிக்கொண்டிருந்தபோது, மூன்று பேரால் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் அந்த இடத்தினூடாக சென்ற எரிவாயு (கேஸ்) டேங்க் லோரி ஓட்டுநர் ஒருவர், அவரை தலையில் கால் வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு பின்னர், காயமடைந்த நபர் ஜாசின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை ஜாசின் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 7 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு, மலேசிய குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் ‘கொலை’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனை அல்லது 30–40 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் வழங்கப்படும் என போலீஸ் தலைவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல் தெரிந்தவர்கள், ASP முகமட் ஏஹ்சான் பின் அபூ பாக்கரை (தொலைபேசி: 016-520 9501) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும், வழக்கின் விசாரணையை பாதிக்கும் வகையில் வதந்திகளை பரப்பவேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post மலாக்காவில் பொதுமக்கள் தாக்கியதில் ஆடவர் உயிரிழப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.