மக்களவை தேர்தலில் போட்டியிடும் தனது மகன் தோல்வியடைவது உறுதி என மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே ஆண்டனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து மக்களிடையே தீவிர பிரச்சாரத்தில் தங்களது கட்சிகளை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரளா மாநிலத்தின் தெற்கு கேரளா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின்போது இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஏ.கே.ஆண்டனி, பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள எனது மகன் நிச்சயமாக வெற்றி பெறமாட்டார். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆன்றோ ஆண்டணியே வெற்றி பெறுவார். காங்கிரஸ் எனது மதம். காங்கிரஸ் கட்சி உறுப்பினரின் மகன் பாஜகவில் இணைந்திருப்பது மிகப் பெரிய தவறு.” எனக் கூறினார்.
தொடர்ந்து பாஜகவிற்கு எதிரான காங்கிரஸின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “காங்கிரஸ் கட்சியும் ராகுலும் இணைந்து பிரதமர் மோடிக்கும் பாஜகவிற்கும் ஆர் எஸ் எஸ்க்கும் எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம். நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வளர்ந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி தேய்ந்து வருகிறது. இந்த தேர்தலில் மக்கள் நிச்சயமாக இந்தியா கூட்டணியை வெற்றியடைய செய்வர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் ராகுல் மீது முதலமைச்சர் பினராயி விஜயன் முன் வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, “மக்கள் இதனை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இவை அனைத்தும் அப்பட்டமான பொய்.” என பதிலளித்தார்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் மறுதேர்தல் வேண்டும் என்ற கோரிக்கை வைத்த ஒரு வாரத்திற்கு பிறகு முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,பாஜக மற்றும் காங்கிரஸானது கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தை குறிவைக்கின்றன. அரசியல் நோக்கங்களுக்காக கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்திற்கு (KIIB) எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ள மத்திய புலனாய்வு அமைப்புகளின் முகவராக காங்கிரஸ் செயல்படுகிறது.” எனக் குற்றஞ்சாட்டினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…