Last Updated:
நாளை மறுதினம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை “இந்தியா” கூட்டணிக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
நாளை மறுதினம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை “இந்தியா” கூட்டணிக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில், இந்தியா கூட்டணிக் கட்சியின் மூத்த தலைவர்கள் காணொலி மூலம் இணைய உள்ளனர். பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம், பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலில் அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீடு, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்று மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் முன்பு அறிவித்த நிலையில், அக்கட்சியின் தேசியச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி காணொலி வாயிலாக தற்போது கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி விலகுவதாக அக்கட்சியின் எம்.பி., சஞ்சய் சிங் அறிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜக மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 19, 2025 8:37 AM IST