அலோர் காஜா
அலோர் காஜா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று தனது காதலியின் 19 மாத பெண் குழந்தையை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கடை உதவியாளர் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
20 வயதான முகமட் இஸ்ராஃப் ஹிஃப்ஸான் அப்துல்லா என்பவர் மீது குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது அவர் தலைஅசைத்து ஒப்புதல் அளித்தார். இருப்பினும், இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் சட்ட வரையறைக்குள் வரும் காரணத்தால் எந்த விதமான வாக்குமுலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிகையின்படி, கடந்த ஜூலை 6ம் தேதி இரவு 9 மணியளவில், அலோர் காஜாவில் உள்ள Bandar Satelit Pulau Sebang பகுதியில் அமைந்த கடை ஒன்றின் மூன்றாவது மாடியில் உள்ள இடத்தில், குற்றவாளி அந்த 19 மாத பெண் குழந்தையை கொன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், தூக்கு தண்டனை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 12 தடவைகள் பிரம்படிகள் என கூடிய தண்டனை விதிக்கப்படும்.
சந்தேகநபருக்கு பிணை வழங்கப்படவில்லை. வழக்கின் அடுத்த விசாரணை தேதி செப்டம்பர் 23 ஆக நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பிரதிவாதியாக துணை பொதுமக்கள் வழக்கறிஞர் ஃபிக்ரி ஹாக்கிம் ஜம்ரி பணிபுரிந்தார். குற்றவாளிக்குப் பிரதிநிதியாக எந்த வழக்கறிஞரம் ஆஜராகவில்லை.