Last Updated:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் தாக்கியது.
பஹல்காமில் தாக்குதலை நடத்திய லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான டிஆர்எஃப்-ஐ பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 3 பேர் உள்ளிட்ட 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது. இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் தாக்கியது.
இந்நிலையில் தான் பஹல்காமில் தாக்குதலை நடத்திய லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான டிஆர்எஃப்-ஐ பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் உட்பட இந்தியாவிற்கு எதிரான பல தாக்குதல்களில் டிஆர்எஃப் அமைப்பு ஈடுபட்டிருக்கும் நிலையில், தங்கள் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், பஹல்காமில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் விதமாகவும் டிஆர்எஃப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக டிரம்ப் அரசு அறிவிப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் ஆர்டிக்கிள் 370 ரத்து செய்யப்பட்ட பின்னர், அக்டோபர் 2019 இல் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இந்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ அல்லது சுருக்கமாக TRF என அழைக்கப்படுகிறது. பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தியுள்ள தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பாக TRF இயங்கி வருவதாக நம்பப்படுகிறது. லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பாக செயல்பட்டாலும், ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் இயக்கத்தில் இணைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மதச்சார்பற்ற இயக்கமாக ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும் இந்த இயக்கம் இதுவரை நடத்திய தாக்குதலில் பொதுமக்களை குறிப்பாக காஷ்மீர் இந்துக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் மீதும், காஷ்மீரின் லோக்கல் அரசியல்வாதிகள் மீதும் இதே இயக்கம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த வரிசையில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் இயக்கத்தை முன்னின்று வழிநடத்துபவர் ஷேக் சஜ்ஜாத் குல். இந்த இயக்கத்தை ஆரம்பித்தவரும் இவரே. இந்த இயக்கத்தின் குறிக்கோள் காஷ்மீரை சுதந்திர பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்பதே. அதனை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் இயக்கத்தை இந்திய அரசு தடை செய்யப்பட்ட இயக்கமாக கடந்த 2023ஆம் ஆண்டு அறிவித்தது. மேலும், ஷேக் சஜ்ஜாத் குல்லை தேடப்படும் தீவிரவாதியாகவும் இந்திய அரசு அறிவித்தது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 18, 2025 8:28 AM IST