Last Updated:
உயிரிழப்பு ஏற்பட்டதற்கு ஆர்சிபி அணி நிர்வாகம் தான் காரணம் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ள கர்நாடகா அரசு, அதில் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.
இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 17 ஆண்டுகளாக ஒருமுறை கூட ஆர்சிபி அணி கோப்பையை வெல்லவில்லை. இந்நிலையில், நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக ஆர்சிபி கோப்பையை வென்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்தது.
இதை அடுத்து கடந்த மாதம் 4-ஆம் தேதி வெற்றியை கொண்டாடுவதற்காக பெங்களூருவில் பேரணி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது லட்சக்கணக்கானோர் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். கொண்டாட்ட நிகழ்ச்சியாக மாற வேண்டிய இந்த நிகழ்வு துக்க நிகழ்ச்சியாக மாறியது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கர்நாடக அரசு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: வெற்றி கொண்டாட்டம் நடத்துவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறையான அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இதனால் நெரிசல் சம்பவம் ஏற்படுவதற்கு முந்தைய நாளான ஜூன் 3-ஆம் தேதி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஏனென்றால் எத்தனை பேர் வருவார்கள், என்ன விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்பது குறித்த தகவல்கள் கிடையாது. அதைத்தொடர்ந்து மறுநாள் ஜூன் நான்காம் தேதி காலை 8:55 மணிக்கு ஆர்சிபி அணி நிர்வாகம் விராட் கோலியுடைய வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டது.
அதில் ரசிகர்கள் உடன் பெங்களூருவில் அன்றைய தினம் வெற்றியை கொண்டாட விரும்புவதாக விராட் கோலி விருப்பம் தெரிவித்து இருந்தார். இத்தகைய அணி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அதிகப்படியான ரசிகர்கள் கூடுவதற்கு காரணமாகிவிட்டது. மூன்று லட்சம் பேர் வரை ஒரே இடத்தில் கூடினார்கள். உயிரிழப்பு ஏற்பட்டதற்கு ஆர்சிபி அணி நிர்வாகம் தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
July 17, 2025 2:26 PM IST
நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம்.. கர்நாடக அரசின் ரிப்போர்ட்டால் விராட் கோலிக்கு சிக்கல்..?