இச்சம்பவம் குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வா் மம்தா, 2022 குண்டுவெடிப்பு வழக்குத் தொடா்பாக கிராமத்தினா் வீட்டுக்குள் என்ஐஏ விசாரணைக் குழு அதிகாலையில் சென்றுள்ளது. அப்போது இதற்கு எதிராக மட்டுமே பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெண்கள் யாரும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், அதிகாரிகள்தான் உள்ளூா் மக்கள் மீது தாக்குதல் நடத்தினா்’ என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே, உள்ளூர் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கிழக்கு மிட்னாபூர் காவல்துறையினர் என்ஐஏ மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் அளித்துள்ள புகாரில், தன்னையும் தன் கணவரையும் அதிகாரிகள் தாக்கியதாகவும், அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தன்னிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொள்ள முற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, ஐபிசி பிரிவுகள் 325, 34, 354, 354(பி), 427, 448, 509 ஆகியவற்றின் கீழ், பூபதிநகர் காவல்நிலையத்தில் என்ஐஏ மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேற்கண்ட வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு என்ஐஏ அதிகாரிகள் இருவருக்கு அம்மாநில காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. காயமடைந்த என் ஐ ஏ அதிகாரி உரிய மருத்துவச் சான்றிதழ்களுடன் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.