சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.53,280-க்குவிற்பனையாகிறது. தங்கம் விலைதொடர்ந்து அதிகரித்து வருவதால்,சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கதிட்டமிட்டுள்ளோர் கவலை அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
கடந்த 2022 டிசம்பர் 26-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.43,040-க்கு விற்கப்பட்டது. இது அப்போது அதிகபட்ச உயர்வாக கருதப்பட்டது. ஆனால்,பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது.
கடந்த 2023 பிப்ரவரியில் ஒரு பவுன்ரூ.44 ஆயிரம், மார்ச்சில் ரூ.45 ஆயிரம், ஜூனில் ரூ.46 ஆயிரம், டிசம்பரில் ரூ.47 ஆயிரம் என விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. பின்னர், விலை குறைந்து ஒரு பவுன் ரூ.46 ஆயிரத்துக்குள் விற்பனையாகி வந்தது.
இந்நிலையில், 2024-ல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த பிப்ரவரியில் ஒரு பவுன் ரூ.48 ஆயிரம், கடந்த மார்ச் 9-ம் தேதி ரூ.49 ஆயிரம், மார்ச் 28-ம் தேதி ரூ.50 ஆயிரம், 29-ம் தேதி ரூ.51 ஆயிரம், கடந்த 3-ம் தேதி ரூ.52 ஆயிரம் என வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, புதிய உச்சங்களை எட்டியது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6,615-க்கும், ஒரு பவுன்ரூ.52,920-க்கும் விற்கப்பட்ட நிலையில் நேற்று கிராமுக்கு ரூ.45 என பவுனுக்கு ரூ.360 உயர்ந்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.6,660-க்கும், ஒரு பவுன் ரூ.53,280-க்கும் விற்பனையானது.
இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.7,130-க்கும், ஒரு பவுன் ரூ.57,040-க்கும் விற்பனையானது.
வெள்ளி ஒரு கிராம் விலை நேற்று முன்தினம் ரூ.87 ஆக இருந்த நிலையில், நேற்று ரூ.88 ஆக உயர்ந்தது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.88,000 ஆக உள்ளது.
ஒரே மாதத்தில் ரூ.4,440 உயர்வு
கடந்த மார்ச் 8-ம் தேதி ஆபரண தங்கம் ஒரு பவுன் விலை ரூ.48,840 ஆக இருந்தது. ஒரே மாதத்தில் பவுனுக்கு ரூ.4,440 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க திட்டமிட்டுள்ளோர் கவலை அடைந்துள்ளனர். இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கம் விலை ரூ.60 ஆயிரத்தை எட்டும் என நகை வியாபாரிகள் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.