சென்னை: பாரத் கவுரவ் திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் (2023-24) தனியார் நிறுவனங்கள் சார்பில், 42 ரயில் பயண திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலமாக, தெற்கு ரயில்வேக்கு ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்புவாய்ந்த இடங்களை மக்கள் கண்டுகளிக்கும் வகையில், ‘பாரத்கவுரவ்’ ரயில் திட்டத்தை இந்தியரயில்வே கடந்த 2021-ம் ஆண்டுநவம்பர் 23-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் ரயில்களை இயக்குவது மட்டுமே ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு. மற்ற சேவைகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும்.
தெற்கு ரயில்வேயில் முதல் ரயில் சேவை கோயம்புத்தூர் – ஷீரடிக்கு இயக்கப்பட்டது. இதன்பிறகு, வெவ்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, கோடைகால சிறப்பு சுற்றுலா ரயில்களை இயக்குவதற்கு தனியார் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், பாரத் கவுரவ்திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் (2023-24) தனியார் நிறுவனங்கள் சார்பில், 42 ரயில் பயணத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலமாக, தெற்கு ரயில்வேக்கு கடந்த நிதியாண்டில் (2023-24) ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கோயம்புத்தூர்-ஷீரடிக்கு முதல் ரயில் சேவை கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் தொடங்கியது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட ரயில் பயணத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம், ரயில்வேக்கு கணிசமாக வருவாய் கிடைத்துள்ளது.
பாரத் கவுரவ் திட்டத்தின்கீழ், ரயில்கள் இயக்க சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அனுபவம் வாய்ந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு முன்னுரிமைஅளிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.